ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
மத்திய அரசு அறிவித்தது போல் 1.1.2022-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்ட நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பூவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீடுக்கு மாதந்தோறும் ரூ.147 மற்றும் குடும்ப நல நிதிக்கு ரூ.70 பிடித்த செய்வதை உடனே நிறுத்த வேண்டும். மலைபடி, குளிர்கால படி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.