ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உடல் தானம்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உடல் தானமாக வழங்கப்பட்டது
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆசிரியர் நாகராஜன் (வயது 87). இவர் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். பின்னர் பல சமூகப் பணிகளை செய்து வந்தார். வயது மூப்பு காரணமாக நேற்று அவர் இறந்துவிட்டார். அவர் உயிருடன் இருக்கும் போது தான் இறந்த பிறகு உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என குடும்பத்தினர்களிடம் விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது உடலை மகன் எழில்நம்பி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கினார். அவரின் உடல் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி கிராம மக்களிடையே உடல் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.