செல்போனில் பொழுதை கழிக்கும் பேத்திக்கு அறிவுரை வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனு


செல்போனில் பொழுதை கழிக்கும் பேத்திக்கு அறிவுரை வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனு
x

செல்போனில் 18 மணி நேரம் பொழுதை கழிக்கும் தனது பேத்திக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர் புகார் மனு அளித்தார்.

வேலூர்

செல்போனில் 18 மணி நேரம் பொழுதை கழிக்கும் தனது பேத்திக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர் புகார் மனு அளித்தார்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். காட்பாடியை சேர்ந்த சுசிலா என்பவர் அளித்த மனுவில், ''நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே ரூ.10 ஆயிரம் வைத்திருந்த பையுடன் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த பக்கத்து தெருவை சேர்ந்த வாலிபர் திடீரென பணப்பையை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து வாலிபரின் தாயார் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

பேத்திக்கு அறிவுரை

வேலூர் தொரப்பாடி காமராஜர்நகரை சேர்ந்த ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் என்பவர் அளித்த மனுவில், ''எனது மகன் வழி பேத்திக்கு 26 வயது ஆகிறது. அவர் சரியாக படிக்கவும் இல்லை. தற்போது அரசு, தனியார் என்று எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் 18 மணி நேரம் செல்போனில் பொழுதை கழித்து வருகிறார். நான் சொல்வதை அவள் கேட்பதில்லை. எனவே எனது பேத்திக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டை சேர்ந்த முதியவர் ரவி அளித்த மனுவில், ''எனது வீட்டிற்கு செல்லும் பாதையில் மரக்கிளைகள், கட்டைகளை வெட்டி போட்டு செல்ல முடியாதபடி சிலர் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். அதனை அகற்றி வீட்டிற்கு சென்றுவர ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

கொலை மிரட்டல்

குடியாத்தம் கல்லப்பாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசன் அளித்த மனுவில், ''எனது மனைவியும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தட்டி கேட்ட என்னை இருவரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பின்னர் கூறுகையில், ''ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மனு அளித்துள்ளதையொட்டி செல்போனில் பொழுதை கழிக்கும் அவரது பேத்திக்கு முதற்கட்டமாக போலீசார் மூலம் அறிவுரை வழங்கப்படும். தேவைப்பட்டால் அதன்பின்னர் டாக்டர் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்படும். ரூ.10 ஆயிரம் பணம் பறித்தது மற்றும் மாற்றுத்திறனாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் முதியவர் ரவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்து தகவல் தெரிவிக்க வேண்டும''் என்று உத்தரவிட்டார்.


Next Story