ஓய்வு பெற்ற நகராட்சி மேலாளர் பலி
மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற நகராட்சி மேலாளர் பலி
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்காதர் மகன் பீர் முஹம்மது (வயது 74). கடையநல்லூர் நகராட்சியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் கம்பெனியில் பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் பணி செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று தென்காசியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு ஈனா விலக்கு அருகே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தென்காசி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பீர் முஹம்மது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பீர்முஹம்மது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
காரை ஓட்டி வந்த டிரைவர் அருண்ராஜூம் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவர் அருண் ராஜை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலத்தூர் போலீசார், பீர் முஹம்மதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.