ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியரிடம் ரூ.12¾ லட்சம் மோசடி
ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியரிடம் ரூ.12¾ லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டது.
கடலூர்;
குறிஞ்சிப்பாடி அருகே பார்வதிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 73). ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியரான இவர், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கும், எனக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் வீட்டுமனைகளை வாங்கி விற்கும் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். இந்த நிலையில் நான் ஓய்வுபெற்ற போது வந்த பணத்தில் இருந்து வீட்டுமனை வாங்க முடிவு செய்து, அந்த தம்பதியை அணுகினேன். அப்போது அவர்கள் வேப்பூர், நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட 5 இடங்களில் வீட்டுமனை உள்ளதாகவும் கூறினர். இதையடுத்து அவர்களிடம் வீட்டுமனை வாங்கி கொடுப்பதற்காக ரூ.12 லட்சத்து 88 ஆயிரத்து 500 கொடுத்தேன். அதனை பெற்றுக் கொண்ட அந்த தம்பதியினர், இதுவரை வீட்டுமனை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். மேலும் அவர்களது சொந்த உபயோகத்திற்காக எடுத்துச் சென்ற எனது காரையும் அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி பெற்று கொடுப்பதுடன், மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.