பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் ஓய்வுபெற்றோர் அமைப்பினர் போராட்டம்
பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நேற்று விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு விழுப்புரம் கிளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் கிளை நிர்வாகிகள் சகாதேவன், சின்னராசு, சேஷையன், பலராமன், கலியமூர்த்தி, வேலூர் கோவிந்தசாமி, காஞ்சீபுரம் பலராமன் உள்பட விழுப்புரம், கடலூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பணப்பலன்களை வழங்கக்கோரி
கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கும் வரை அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தின் உள்ளே காத்திருப்பதாக கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையறிந்ததும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதில் உடன்பாடு ஏற்படாமல், பணப்பலன் வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் என தெரிவித்து, தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.