மனைவி இறந்த வேதனையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு
பொறையாறில், மனைவி இறந்த மனவேதனையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார்.
பொறையாறில், மனைவி இறந்த மனவேதனையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார்.
சாவிலும் இணைபிரியா தம்பதி குறித்த விவரம் வருமாறு:-
ஓய்வு பெற்ற ஆசிரியர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு சிவன் கோவில் கீழ வீதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி சரோஜினி(68).
இவர்களுக்கு மனோன்மணி, மதுமதி, மகேஸ்வரி, ஜாஸ்மின் என்ற 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
மனைவி சாவு
சொக்கலிங்கமும் அவரது மனைவி சரோஜினியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த சரோஜினி கடந்த 27-ந் தேதி இறந்தார். இதனால் சொக்கலிங்கம் மிகுந்த மனவேதனை அடைந்து மனைவி சரோஜினியின் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டே இருந்தார்.
பின்னர் சரோஜினியின் உடல் நேற்று முன்தினம் மாலை பொறையாறில் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சொக்கலிங்கம் துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தார். நேற்று இரவு அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
கணவரும் இறந்தார்
உடனே அவரை சிகிச்சைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நேற்று மாலை பொறையாறில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.மனைவி இறந்த மனவேதனையில் கணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.