ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மின்சாரம் பாய்ந்து சாவு
குளச்சல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
குளச்சல்,
குளச்சல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்
கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சூசை மிக்கேல் (வயது 67). இவர், அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ரீத்தம்மாள் (60). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
சூசைமிக்கேல் வீட்டில் 4 ஆடுகள் வளர்த்து வந்தார். அவற்றுக்கு தழை போடுவதற்காக காலையில் வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இலைகள் பறித்தார். அப்போது அவர் இலை பறித்த கம்பியின் மேல் பகுதி எதிர்பாராமல் அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
சாவு
உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூசைமிக்கேல் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்கள்.
இது குறித்து ரீத்தம்மாள் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.