கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை ஊழியர்கள்
தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். அதன்படி, தேனி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்பட வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.
அந்த கோரிக்கை அட்டையில், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான கூடுதல் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீதும் அரசாணை வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
வருவாய்த்துறை அலுவலர்கள் 2 நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற திட்டமிட்டு இருந்தனர். அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை) வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற உள்ளனர்.