விருத்தாசலத்தில் இரும்பு கடைக்கு வந்த 8 விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை


விருத்தாசலத்தில் இரும்பு கடைக்கு வந்த 8 விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் இரும்பு கடைக்கு வந்த 8 விலையில்லா சைக்கிள்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. சாலையில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்பு கடையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 8 சைக்கிள்கள் நேற்று நின்று கொண்டிருந்தன. பொதுமக்கள் சிலர் அதனை வாங்குவதற்கு விலை பேசிக் கொண்டிருந்தனர்.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து அறிந்த விருத்தாசலம் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பழைய இரும்பு கடைக்கு நேரில் சென்று, விலையில்லா சைக்கிள்கள் இங்கு எப்படி வந்தது என கடையில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் சைக்கிளில் இருந்த எண்ணை பதிவு செய்து அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி அது எந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வழங்கப்பட்ட சைக்கிள் என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

அப்போது இரும்பு கடை ஊழியர்கள் இது ஜமாத் மூலம் வழங்கப்பட்ட சைக்கிள்கள், சர்வீஸ் செய்வதற்காக கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த அதிகாரிகள் இந்த சைக்கிள்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டவையா? அல்லது ஜமாத்திற்கு வழங்கப்பட்டவையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றனர்.

பறிமுதல்

அரசால் ஜமாத்திற்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் என்றால், உரிய ஆவணங்களை கொடுத்து விட்டு சைக்கிள்களை எடுத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டு, அனைத்து சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புத்தம் புதிதாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அவை பழைய இரும்பு கடையில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story