கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது
தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம், சிற்றாறு மற்றும் மேலவைப்பாறு வடிநிலக் கோட்டம், தீயணைப்புத் துறை ஆகியவற்றின் அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஐடக் சிரு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், உதவி கலெக்டர்கள் கங்காதேவி, அஸ்ரத் பேகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இ- சேவை மையம் மூலம் வழங்கப்படும் அனைத்துவிதமான சான்றிதழ்கள், ஓய்வூதிய மனுக்கள், பட்டா மாறுதல் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான மனுக்களை விரைந்து முடித்திட வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தென்காசி தாலுகா அலுவலகம் மற்றும் கடையநல்லூர் தாலுகா அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, ஒவ்வொரு அலுவலர் நிலையிலும் நிலுவை இனங்களை ஆய்வு மேற்கொண்டு உடன் அவற்றை முடிவு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.