வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
மதுரை உள்பட 5 மாவட்டங்களில் வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை உள்பட 5 மாவட்டங்களில் வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் சாகுபடி
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மதுரை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியில் நேற்று நடந்தது. வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இயக்குனர் நடராஜன், வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துரை, கலெக்டர் அனிஷ்சேகர், தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தா தேவி, கூடுதல் கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், மாங்குடி, வெங்கடேசன், கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொலைநோக்கு திட்டம்
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
முதல்-அமைச்சரின் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல். இருபோக சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தரிசு நிலங்கள்
2021-22-ம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துக்களில் இந்த திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத்தொகை பழக்கூடைகள், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை, குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊருணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வேளாண்மைத்துறையின் மூலம் 3 லட்சம் பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 1 லட்சத்து 67 ஆயிரம் பயனாளிகளுக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தரிசு நிலத்தொகுப்புத் திட்டத்தின் கீழ் 1,930 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தரிசு நிலத்தொகுப்புகளையெல்லாம் அதிக சதவிகிதம் விளைநிலங்களாக மாற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகின்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 200 ஆழ்துளை கிணறுகள் அமைத்து தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 500 பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 121 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட உள்ளன. 500 தென்னை மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்த கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்கின்றனரா என்பதையும் கண்காணித்து வருகின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பதையும் நவீன எந்திரம் மூலம் நடவு செய்யும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னர் புத்தாக்க பயிற்சியில் அமைக்கப்பட்டு உள்ள அரங்குகளையும் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.