முதல்-அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திருவண்ணாமலைக்கு வருகைதர உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திருவண்ணாமலைக்கு வருகைதர உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திருவண்ணாமலைக்கு வருகைதர உள்ளார். அவருடைய வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் வரவேற்றார். இதில் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தடையில்லா மின்சாரம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் 20 நாட்களுக்குள் திருவண்ணாமலைக்கு வருகைதர உள்ளார். இதை முன்னிட்டு அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும் பயனாளிகளை அழைத்துவர வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்.
பயனாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். விழாவை முன்னிட்டு வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள், திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டவுள்ள பணிகளின் விவரத்தினை முறையாக தொகுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.