வேளாண் சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்


வேளாண் சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x

வேளாண் சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

வேளாண் சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு மற்றும் முன்னோடி திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், முதல்-அமைச்சரின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் தரிசு நிலங்களில் சாகுபடிக்கு கொண்டு வருதல், வரப்பு பயிர்களை ஊக்குவித்தல், தென்னங்கன்றுகள் வழங்குதல், ஜிப்சம் மற்றும் தார்பாய்கள் வழங்குதல் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டு தோட்டம் அமைத்தல், அங்கக இடுபொருட்கள் வழங்குதல், உபகரணங்கள் வழங்குதல், வரப்பு ஓரங்களில் பழ செடிகள் மற்றும் மரக்கன்று நடுதல் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

விவசாயிகள் கடன் அட்டை

வேளாண் பொறியியல் துறையின் மூலம் நீர் ஆதாரங்களை பெருக்க ஆழ்துளை கிணறுகள் மற்றும் பண்ணை குட்டை அமைத்தல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல் குறித்தும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் மூலம் வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்தும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளின் நலன் காக்க பால் உற்பத்தியை பெருக்குதல் தொடர்பாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தகுதியை பொறுத்து பயிர் கடன் வழங்குதல் குறித்தும் கேட்டிருந்தார்.

மேலும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தகுதி உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளுக்கு வழங்கிடவும், பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்தல், விவசாயிகள் கடன் அட்டை குறித்தும், உரத்தேவைகள் மற்றும் ஆய்வுகள் குறித்தும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தல், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், எந்திர மயமாக்குதல் திட்டம் போன்ற இதர வேளாண் சார்ந்த துறைகளின் திட்டப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அதிகாரிகள் பங்கேற்பு

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் பாலா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் அருணாச்சலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story