நெல் நடவு செய்யும் பணி மும்முரம்


நெல் நடவு செய்யும் பணி மும்முரம்
x

நெல்லை அருகே பிசான சாகுபடிக்கு நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி

பாலாமடை:

நெல்லை அருகே பிசான சாகுபடிக்கு நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பாபநாசம் அணை நீர்மட்டம் 94 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 89 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 99 அடியாகவும் உள்ளது.

பிசான சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு-தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், நெல்லை, கோடகன், பாளையங்கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் பாசனங்கள் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன.

நெல் நடவு பணி

இதையடுத்து நெல் சாகுபடிக்காக நெல்லை அருகே உள்ள பாலாமடை, ராஜவல்லிபுரம், குப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய வயல்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் நெல் நடவு செய்து தற்போது களை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை, பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் பாசன பகுதிகளான நெல்லை அருகன்குளம், கட்டுடையார் குடியிருப்பு, ராஜவல்லிபுரம், திம்மராஜபுரம், குன்னத்தூர், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நிலங்களை உழுது நெல் நடவுக்கு தயார் செய்துள்ளனர். மேலும் நெல் நடவு செய்யும் பணியில் அந்த பகுதி மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மும்முரம்

சில இடங்களில் நெல் பயிர் நடவு பணி மட்டுமின்றி, நெல் நாற்று பாவும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் கிணறு உள்ள விவசாயிகள் ஏற்கனவே நாற்று பாவி தயார் நிலையில் நாற்று வைத்திருந்தனர். அவர்கள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை அருகே உள்ள பாலாமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கிணற்று பாசனம் உள்ளவர்கள். ஏற்கனவே நெல் நாற்று பாவி நாற்றுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். தற்போது அந்த விவசாயிகளும் நெல் நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

உரம் தட்டுப்பாடு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'நெல் நடவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 100 நாள் வேலைக்கு பெண்கள் செல்வதால் நாற்று நடவு செய்வதற்கு தேவையான அளவுக்கு பணியாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் உரம் தட்டுப்பாடாக உள்ளது. கூட்டுறவு சங்கத்தை விட தனியார் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து உரங்கள் வாங்கும் நிலை உள்ளது, என்றனர்.


Next Story