இந்தியாவில் நடப்பாண்டு அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது
இந்தியாவில் நடப்பாண்டு அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது
இந்தியாவில் நடப்பாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது எனவும் இந்திய உணவு கழக தலைவர் அசோக்குமார் மீனா கூறினார்.
அம்பேத்கர் சிலை சிறப்பு
தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் குழந்தை யேசு கோவில் அருகில் இந்திய உணவு கழக கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்துக்கு இந்திய உணவு கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான அசோக்குமார் மீனா நேற்று வந்தார்.
அங்கு அவர், அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அருங்காட்சியகத்தையும் அவர் சுற்றிபார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
170 லட்சம் டன் கூடுதல் அரிசி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 570 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் கோதுமை உற்பத்தியும் போதுமான அளவுக்கு இருக்கிறது. கடந்த ஆண்டு கோதுமை தேவை 262 லட்சம் டன்னாக இருந்த நிலையில், போதுமான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
இதேபோல கடந்த ஆண்டு பிரதமரின் காரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு 400 லட்சம் டன் அரிசி தேவைப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக 570 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது 170 லட்சம் டன் கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பாண்டு பாதிப்பு ஏற்படாது
அரிசி உற்பத்தியில் சுயசார்பு நிலை எட்டப்பட்டுள்ளதால், போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இந்த ஆண்டும் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது.
நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி குறைவு ஏற்பட்டாலும், அதற்கு ஈடாக மற்ற பகுதிகளில் உற்பத்தி இருக்கும். விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகத்தான் திறந்தவெளி சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
521 டன் கொள்முதல் இலக்கு
மத்திய, மாநில அரசுகள் பிரதமரின் காரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குகின்றன. ஆனால் மீதமுள்ள 60 கோடி மக்களுக்கு காரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் கிடைக்காததால், அவர்களுக்கு திறந்தவெளி சந்தை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு காரீப் பருவத்தில் 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட கூடுதலாக கொள்முதலாகும் என நம்புகிறோம்.
சிறுதானியங்கள் கொள்முதல்
மத்திய அரசின் சிறுதானிய ஆண்டு இயக்கத்தையொட்டி, கேழ்வரகு, துவரம் பருப்பு, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் சிறு தானியங்களை கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இதேபோல ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறுதானிய கொள்முதல் தொடங்கப்படும்.
17 சதவீதம் ஈரப்பதம்
நெல் கொள்முதலில் ஈரப்பத தளர்வு காரணமாக நுகர்வோர்களுக்கு தரம் குறைவான அரிசி கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களது நெல்லை நன்கு காய வைத்து 17 சதவீதத்துக்குள் ஈரப்பதத்துடன் கொள்முதல் நிலையத்தில் கொடுத்தால், நுகர்வோர்களும் தரமான அரிசியை உண்பதற்கு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது இந்திய உணவு கழகத்தின் தமிழ்நாடு பொதுமேலாளர் முத்துமாறன், கோட்ட மேலாளர் ரோகினேஸ்வர குமார் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் உடன் இருந்தனர்.