தொடர்ந்து உயரும் அரிசி விலை... பொதுமக்கள் அதிர்ச்சி
தொடர்ந்து உயர்ந்து வரும் அரிசி விலை பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொருளாதார பின்னடைவு
இந்திய உணவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி உணவு முக்கிய இடம் பிடிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இந்த அரிசியின் தரம் சிறந்ததாக இல்லாததால் பலரும் சாப்பிடத் தயங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய நாள் முதலாக ஏராளமானவர்களுடைய வாழ்வியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக சிறந்த நிலையில் இருந்த பலரும் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிலோவுக்கு ரூ.10 உயர்வு
இத்தகைய சூழலில் உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்வை சந்தித்துள்ளன. அத்தியாவசியப்பொருட்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது அரிசியாகும். ஒவ்வொரு ஏழை நடுத்தரக் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டிலும் அரிசிக்கென்று ஒரு தொகை ஒதுக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசிக்கு ரூ.10 வரை விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் தரமான சன்ன ரக அரிசி வாங்க வேண்டுமானால் ஒரு கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் கொடுக்க வேண்டியதுள்ளது. இது ஏழை நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரிசி விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாய விலைக்கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்றுமதி
அரிசி விலை உயர்வு குறித்து மொத்த விற்பனையாளர்கள் கூறியதாவது:-
அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஏற்றுமதி மற்றும் நெல் பற்றாக்குறையாகும். தமிழக அரிசி உற்பத்தி பெருமளவில் கர்நாடகாவையே நம்பியுள்ளது. அங்கிருந்து கொண்டு வரப்படும் நெல் இங்குள்ள அரிசி ஆலைகளில் அரவை செய்யப்பட்டு அரிசி உற்பத்தி நடைபெறுகிறது. கர்நாடகாவில் நெல் சாகுபடி குறைந்தாலோ மகசூல் இழப்பு ஏற்பட்டாலோ அதன் தாக்கம் தமிழகத்தில் பலமாக எதிரொலிக்கும். கடந்த சில ஆண்டுகளாக அரிசி விலையில் பெரிய உயர்வு எதுவும் இல்லை. இதனால் அரிசி ஆலையினர் பெரிய அளவில் நெல் இருப்பு வைக்கவில்லை.
இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசு, அடுத்தகட்டமாக அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது. இதனால் தேவை அதிகரித்து விலை உயர்வு தொடங்கியது. இதனையடுத்து மத்திய அரசு, உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 20சதவீதம்் ஏற்றுமதி வரி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் கடந்த பருவத்தில் நெல் உற்பத்தியும் குறைந்த அளவே இருந்ததால் இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. தற்போதைய பருவத்தில் நெல் உற்பத்தியைப் பொறுத்தே அரிசி விலையில் மாற்றங்கள் ஏற்படும். அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை அரிசி விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து உயரும்
அரிசி விலை...
பொதுமக்கள் அதிர்ச்சி
உணவுப்பண்டங்கள் விலை உயரும்
தொடர்ச்சியாக விழும் அடிகள் அஸ்திவாரத்தையே அசைத்து விடும் அபாயம் உள்ளது. அதுபோல பலவிதங்களில் விலை உயர்வை சந்திக்கும் மக்களுக்கு அரிசி விலை உயர்வு பேரதிர்ச்சி தரும் விஷயமாகவே உள்ளது.
அரிசி விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.