கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ேநற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 392 மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 536 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிவாரணம் வேண்டும்
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் 1,108 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 262 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ளதால் பலர் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுவரை மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய வழிகாட்டுதலையும், நிவாரணங்களையும் அரசு வழங்க முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட போராட்டம், மக்கள் போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
இதேபோல் கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வாழும் குடியிருப்பு முகவரியின் பெயர்கள் அர்ஜூன தெரு, ஆதிதிராவிடர் தெரு, எஸ்.சி.காலனி என்று உள்ளது. எனவே அந்த முகவரிகளின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம், குப்பம், சிவாயம் பகுதிகளில் நாளை (புதன்கிழமை) கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடக்கிறது. எனவே அந்த கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.