பெரியகுளத்தில் ஊர்வலத்தின் போது கலவரம்:போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு; இன்ஸ்பெக்டர் ஜீப், பஸ் கண்ணாடி உடைப்பு:பதற்றம்-போலீசார் குவிப்பு
பெரியகுளத்தில், ஊா்வலத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு எதிரொலியாக, போலீஸ் நிலையத்தின் மீது சிலர் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் ஜீப், ஆம்புலன்ஸ், பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாள்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாலையில் இரு பகுதியை சேர்ந்தவர்கள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தின் போது இரு பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இரவில் ஊர்வலம் முடிந்து அதில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
அப்போது வடகரை போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி வழியாக சென்ற சிலர் திடீரென போலீஸ் நிலையம் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கற்கள் போலீஸ் நிலையத்துக்குள் சரமாரியாக விழுந்தன.
அதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும், அங்கு நின்ற 108 ஆம்புலன்ஸ் மீதும் கல்வீசப்பட்டது. அதன் கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது. இதையடுத்து ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் கல்வீச்சில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
அதுபோல், பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் சென்ற அரசு பஸ் மீதும் சிலர் கல்வீசி தாக்கினர். அதில் பஸ் கண்ணாடி உடைந்தது.
போலீஸ் குவிப்பு
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே விரைந்து வந்து பார்வையிட்டார்.
இந்நிலையில் கல்வீச்சில் ஈடுபட்டதாக சிலரை போலீசார் துரத்திப் பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.