'ரெடிமேடு' ஆடைகள் வரவு அதிகரிப்பு: தையல் தொழில் நலிவடைகிறதா?-தையல் கலைஞர்கள் கருத்து


ரெடிமேடு ஆடைகள் வரவு அதிகரிப்பு: தையல் தொழில் நலிவடைகிறதா?-தையல் கலைஞர்கள் கருத்து
x

‘ரெடிமேடு’ ஆடைகள் வரவு அதிகரிப்பால் தையல் தொழில் நலிவடைகிறதா? என்பது குறித்து தையல் கலைஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தர்மபுரி

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமேடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.

குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாக சென்று, விருப்பமான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடிமுன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது.

தையல் கலைஞர்கள்

இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

அதே நேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறைய கடைகள் முளைத்திருக்கின்றன.

திருமணம் மற்றும் விழாக்களின் போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள்.

'ஆரி ஒர்க்' என்று இதைச்சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல; ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம்.

எனவே தையல் தொழில் நசிந்து வருக்கிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

அரசின் ஆதரவுக்கரம்

தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திவ்யநாதன்:-

தமிழ்நாட்டில் 60 லட்சம் தையல் தொழிலாளிகள் இருந்தார்கள். 'ரெடிமேடு' ஆடைகள் பயன்பாடு அதிகரித்த பின்னர் தையல் தொழில் நலிவடைய தொடங்கியது. எனவே தையல் தொழிலாளர்கள் பலர் கட்டிட வேலை, பெயிண்டிங், ஆட்டோ ஓட்டுவது என்று தங்கள் தொழிலை மாற்றிக்கொண்டனர். இதனால் இந்த தொழில் அடுத்த தலைமுறைக்கு இருக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தையல் தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும். ரெடிமேடு ஆடைகள் வடமாநிலங்களில் இருந்து தைத்து அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை கொண்டு வந்து தமிழகத்தை சேர்ந்த தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தைக்கும் ஒப்பந்தத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்காமல் நேரடியாக தையல் கலைஞர்களிடம் வழங்க வேண்டும். எங்கள் சங்கம் சார்பில் தனியார் பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களின் சீருடையை தைத்து தருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். தடுமாறி வரும் தையல் தொழில் கீழே விழாமல் இருக்க அரசாங்கம் ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டும்.

வாழ்வாதாரம்

தர்மபுரியை சேர்ந்த தையல் கலைஞர் பிரபாகரன்:-

தையல் கடைகளில் வாடிக்கையாளர்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் உடைகளை தைத்து தருகிறோம். தையல் பணிக்கு தரமான பொருட்களை பயன்படுத்துகிறோம். இதனால் அந்த ஆடைகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தையல் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ரெடிமேடு ஆடைகள் பொதுவான அளவுகளில் தைக்கப்படுபவை. அவை தனி நபர்களுக்கு முழுமையான பிட்டிங் கொண்டதாக இருப்பதில்லை. இதனால் அவை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பொருத்தமாக இருப்பதில்லை. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிகளை தைப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருந்தது. இதனால் ஏராளமான தையல் கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்தது. ரெடிமேடு ஆடைகள் விற்பனை அதிகரித்த பின் ஆயிரக்கணக்கான தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இறங்கு முகத்தில் தொழில்

பாலக்கோட்டை சேர்ந்த தையல் கடைக்காரர் கிருஷ்ணன்:-

சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தைப்பதற்கான துணிமணிகள் வந்து குவியும். ரெடிமேடு ஆடைகள் ஆதிக்கம் தொடங்கிய பின்னர் தையல் தொழில் இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. துணிகள் வாங்கி வந்து ஒவ்வொருவரின் அளவுக்கு ஏற்ப தைத்து உடுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே குறைந்து வருகிறது.

துணி தைக்க கொடுத்தால் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் அதற்கு மக்களிடையே பொறுமை இல்லை. நேரடியாக ஜவுளிகடைக்கு சென்று ரெடிமேடு ஆடைகளை வாங்கி உடுத்த வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. சிறிய நகரங்களில் கூட ரெடிமேடு ஜவுளிக்கடைகள் அதிகரித்துவிட்டன. இதனால் தையல் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தையல் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து உதவிகள் வழங்க வேண்டும்.

சிறப்பு கவனம்

தர்மபுரியை சேர்ந்த பெண் தையல் கலைஞர் பவித்ரா:-

பெண்களுக்கு அவர்கள் அணியும் ஆடை தான் அழகை ஏற்படுத்துகிறது. எங்களிடம் துணிகளை தைக்க தரும் பெண்களுக்கு அவர்களுடைய உடல்வாகுக்கு ஏற்ப சிறப்பான முறையில் ஆடைகளை தைத்து வழங்குகிறோம். பெண்களுக்கான பிளவுஸ் தைப்பதற்கு அவற்றின் மாடலுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கிறோம். இப்போது பெண்களுக்கும் அதிக அளவில் ரெடிமேடு ஆடைகள் வரத்தொடங்கி விட்டன. குறிப்பாக சுடிதார் உள்ளிட்ட நவீன ரக ஆடைகள் விற்பனைக்கு வருகின்றன. தையல் கலைஞர்கள் சிறப்பு கவனம் செலுத்தி தைப்பது போல் ரெடிமேடு ஆடைகளை தைக்க வாய்ப்பு இல்லை. இருந்தபோதிலும் ரெடிமேடு ஆடைகளை பெண்கள் அதிக அளவில் விரும்புவதால் எங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பல பெண் தையல் கலைஞர்கள் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

வேலை வாய்ப்பு

கார்மெண்ட்ஸ் உரிமையாளர் நாகராஜன்:-

கார்மெண்ட்ஸ் மூலம் நாங்கள் 50-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைக்க மொத்த ஆர்டர் எடுத்து குறித்த நேரத்தில் டெலிவரி செய்து வருகிறோம். இந்த தொழிலை காலதாமதம் ஏற்படுத்தாமல் உரிய நேரத்தில் செய்தால் நல்ல வளர்ச்சி பெற முடியும். மேலும் பல தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வாய்ப்பு ஏற்படும்.

கட்டணம் அதிகம்

தர்மபுரிைய சேர்ந்த பார்த்திபன்:-

துணிகளை கடையில் வாங்குவதற்கு ஒரு செலவு, அதை தைப்பதற்கு ஒரு செலவு என்பதை இப்போது பெரும்பாலானோர் விரும்புவது இல்லை. தையலுக்கான கட்டண தொகை கணிசமாக அதிகரித்திருப்பது முக்கிய காரணம். தையல் கட்டணத்துக்கு ரெடிமேடு ஆடைகளை வாங்கி விடலாம் என்ற சூழல் இப்போது ஏற்பட்டு விட்டது. ரெடிமேடுவில் தரத்திற்கு ஏற்ப பல்வேறு விலைகளில் ஆடைகள் கிடைக்கின்றன. அவற்றை நமது உடல் வாகுக்கு ஏற்ப உடனடியாக மாற்றி தரும் வசதியும் பெரும்பாலான கடைகளில் தற்போது செய்யப்பட்டு விட்டது. ஜவுளி கடைக்கு சென்றால் ரெடிேமடு ஆடைகளை அணிந்து பார்த்து பிடித்ததை உடனே வாங்கி வரலாம். நேரம், அலைச்சல் மிச்சம் என்பதால் ரெடிமேடு ஆடைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்னதான் ரெடிமேடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமேடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.


Next Story