சரிந்து கிடக்கும் மூங்கில்களால் விபத்து அபாயம்
கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து கிடக்கும் மூங்கில்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடலூர்
கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து கிடக்கும் மூங்கில்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சரிந்து கிடக்கும் மூங்கில்கள்
கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை 3 மாநிலங்களை இணைக்கிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கூடலூர் மாக்கமூலா பகுதியில் சாலையின் இருபுறமும் காய்ந்த மூங்கில்கள் உள்ளன.
கடந்த சில வாரங்களாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இரவில் அச்சத்துடன் செல்லும் நிலை தொடர்கிறது. இதேபோல் கூடலூர் பகுதியில் மாலை நேரத்தில் பரவலாக மழையும் பெய்து வருவதால் காய்ந்த மூங்கில்கள் சரிந்து சாலையோரம் விழுந்து கிடக்கிறது. இதேபோல் காட்டு யானையும் மூங்கில்களை சரித்து போட்டுள்ளது.
விபத்து அபாயம்
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில்கள் சரிந்து கிடக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக மூங்கில்கள் நீட்டிக்கொண்டு இருக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சரக்கு லாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்லும்போது சாலையில் விழுந்து கிடக்கும் மூங்கில்களால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மூங்கில்களை வெட்டி அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அனைத்து தரப்பினரும் புகார் தெரிவித்து உள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் மூங்கில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.