திருவெண்ணெய்நல்லூர் அருகேசாலையில் நிறுத்தப்படும் கரும்பு வாகனங்களால் விபத்து அபாயம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையில் நிறுத்தப்படும் கரும்பு வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலையில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு திருவெண்ணெய்நல்லூர், அரசூர், பேரங்கியூர் ஆனத்தூர், மடப்பட்டு, திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, சித்தலிங்கமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் கரும்புகளை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி அரவைக்காக பெரியசெவலை சர்க்கரை ஆலைக்கு கொண்டு வருகிறார்கள். ஆலையில் கரும்பு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் அவ்வாறு வரும் வாகனங்கள் ஆலை அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் - உளுந்தூர்பேட்டை சாலையிலும், மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையிலும் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயமும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சர்க்கரை ஆலை அதிகாரிகள் கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களை ஆலை வளாகத்திற்குள் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.