தண்ணீர் முன்கூட்டியே திறந்ததால் பருத்தி மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்


தண்ணீர் முன்கூட்டியே திறந்ததால் பருத்தி மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்
x

தண்ணீர் முன்கூட்டியே திறந்ததால் பருத்தி மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆறுகளில் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நெல் தவிர கரும்பு, வாழை, தென்னை, உளுந்து, வெற்றிலை, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பணப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

நெல் பயிரை பொறுத்தவரை குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் என டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்கிறார்கள். மேலும் தஞ்சையில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு உற்பத்தி என்பது சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செய்யப்பட்டு வருகிறது.

வாழை, வெற்றிலை

காவிரி படுகைப்பகுதியில் வாழை, வெற்றிலை, பூக்கள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கோடை காலங்களில் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம். கும்பகோணம். திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2020-21 ஆண்டு 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 2021-22 ல் 7 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிற்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு விலை உயர்வு

இந்தியாவில் அதிக அளவு பருத்தி விளைவிக்கக்கூடிய மாநிலங்களான ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக பருவம் தவறி மழை பெய்ததால் பருத்தி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் பருத்தியின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் பருத்தி பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 850-க்கு கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரும்பு, நெல் சாகுபடிக்கு பதிலாக அதிக அளவிலான விவசாயிகள் கோடையில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

காய்க்கும் பருவம்

பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது 2 மாதங்கள் ஆன நிலையில் பருத்திச்செடிகள் பூ வைத்து காய் வைத்துள்ளது. இன்னமும் ஒரு மாத காலத்தில் பருத்தி பஞ்சு விளைச்சலுக்கு வரும். வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணையை 16-ந்தேதி வந்தடைந்து, அதன் பின்னர் பாசனத்தக்கு ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு 27-ந்தேதி கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விட்டது. தற்பொழுது முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் வயல்களில் தண்ணீர் வந்தால் பருத்தி உற்பத்தி என்பது வேர் அழுகல் நோய் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story