குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
வெளிப்பாளையம்
நாகை காடம்பாடியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு
நாகை காடம்பாடியில் உள்ள என். ஜி. ஓ. காலனியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் போலீசிலும், நகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2 நாட்களாக நாகை மாவட்டத்தி்ல் பலத்த மழை பெய்தது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
இதனால் காடம்பாடி என். ஜி.ஓ. காலனியை சுற்றிலும் குளம் போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள் அலுவலகத்திற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி-கல்லூரிக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அங்கு குடியிருப்பவர்கள் கூறுகையில்,
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கு வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே காரணம். இதுகுறித்து பல முறை புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை மீட்டு, தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைத்து தொற்றுநோய் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.