சாக்கடையாக மாறிய குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
லால்குடி அருகே சாக்கடையாக மாறிய குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
லால்குடி அருகே சாக்கடையாக மாறிய குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
லால்குடியை அடுத்த ஆர்.வளவனூர் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இந்த தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆழ்குழாயில் இருந்து வரும் குடிநீர் சாக்கடை நீர் போல் காணப்படுகிறது. இந்த நீரை குடித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுமார் பல ஆண்டுகள் இருக்கும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குரங்குகள் உள்ளே இறங்கி குளிப்பதாகவும் இப்பகுதி மக்கள் குற்றசாட்டுகின்றனர். ஆர்.வளவனூர் ஊராட்சிக்கு அருகே உள்ள மகிழாம்பாடி ஊராட்சிக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆர்.வளவனூர் ஊராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிப்பு
விமலி:- ஆழ்குழாயிலிருந்து வரும் தண்ணீரை தான் நாங்கள் குடித்து வருகிறோம். அந்த தண்ணீர் சாக்கடை நீர் போல் உள்ளது. அதனை குடித்தால் அரிப்பும், எரிச்சலும், தூக்கமின்மையும் ஏற்படுகிறது. இதற்காக பலமுறை மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று வருகிறோம். எனவே எங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும்.
செல்வராஜ்:- தற்போது, வழங்கப்படும் தண்ணீரை குடித்தால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. பக்கத்து ஊரில் காவிரி கூட்டு குடிநீர் வசதி உள்ளது. அங்கு சென்றுதான் நாங்கள் குடிநீர் பிடித்து வருகிறோம்.
தொற்று நோய்
ஜென்மராகினி:- ஆழ்குழாயில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எங்கள் கிராம மக்களின் நலன் கருதி காவிரி கூட்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்தோணியம்மாள்:- ஆர்.வளவனூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். குழந்தை முதல் பெரியோர் வரை இந்த தண்ணீரை தான் குடித்து வருகிறோம். இதனால் மருத்துவத்துக்கே அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.