ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா
சேதமடைந்து மோசமான நிலையில் காட்சி அளிக்கும் ஈச்சங்கோட்டை - சோழபுரம் ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஒரத்தநாடு;
சேதமடைந்து மோசமான நிலையில் காட்சி அளிக்கும் ஈச்சங்கோட்டை - சோழபுரம் ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சேதமடைந்த சாலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டையில் இருந்து ராஜாமடம் ஆற்றாங்கரை வழியில் சோழபுரத்துக்கு இணைப்பு சாலை செல்கிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது.இந்த சாலை வழியாக சோழபுரம், ஈச்சங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் சென்று வந்தனர். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்படும் நெல், நவதானியங்களை வீட்டிற்கு எடுத்து வரவும் இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்த சாலையில் தற்போது கப்பிகள் பெயர்ந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக இந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்களை இயக்கவே முடியாத நிலை உள்ளது.
சிரமம்
சாலை முழுவதும் கப்பி கற்கள் பெயர்ந்து பள்ளம் படுகுழியாகவும், முட்புதர்கள் மண்டி காட்சி அளிப்பதால் இந்த சாலையின் வழியே செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாயிகள் வயல்களை உழுவதற்கும், அறுவடை செய்வதற்கும் அதற்குரிய விவசாய எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் திணறுகின்றனர். இதைப்போல அறுவடை செய்யப்படும் தானியங்களையும் வீடுகளுக்கு கொண்டு வர முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்ள்.
சீரமைக்க கோரிக்கை
இது குறித்து ஈச்சங்கோட்டை, வீரமுண்டான்குடிக்காடு பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பெ.பாண்டுரங்கன்( ஈச்சங்கோட்டை):
ஈச்சங்கோட்டை- சோழபுரம் ஆற்றங்கரை இணைப்பு சாலை விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களுக்கு பயனுள்ள சாலையாகும். இந்த சாலை பழுதைடைந்து பல வருடங்கள் ஆகியும், சாலை சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் இவ்வழியே செல்ல முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கு.ரெங்கசாமி(வீரமுண்டான்குடிக்காடு):
இயற்கை இடற்பாடு, மழை போன்றவற்றால் விவசாய பணியை மேற்கொள்வதே பெரும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட இடு பொருட்களையும், எந்திரங்களையும் வயல் பகுதிக்கு கொண்டு செல்வதற்கும், அறுவடை செய்யப்படும் நெல் மற்றும் தானியங்களை வீட்டிற்கு கொண்டு வருவதற்கும், சாலை வசதி இல்லாததால் சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.