தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா
கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று (வியாழக்கிழமை) ஆற்றுத்திருவிழா நடக்கிறது.
உத்தராயண புண்ணிய காலம் என்று கூறப்படும் தை மாதத்தில் புண்ணிய நதியாம் கங்கை, அனைத்து ஆறுகளிலும் சங்கமிக்கிறது என்பது ஐதீகம். இதனால் பொங்கல் பண்டிகையின் 5-ம் நாளில் ஆற்றில் தீர்த்தவாரி நடத்தினால் கங்கை நதியில் தீர்த்தவாரி நடத்திய பயன் ஏற்படும். அதனால் ஆற்றில் சாமிகள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் ஆற்றுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு ஆற்றுத்திருவிழா நடந்த பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடத்தப்படவில்லை. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) ஆற்றுத்திருவிழா நடத்தப்படுகிறது.
இதற்காக கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் கரைகளில் உள்ள முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கரையோரம் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணி
மேலும் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்தும் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டர், மாட்டு வண்டி போன்ற வாகனங்களில் ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடத்துவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர சிறுவர்-சிறுமியர் விளையாடுவதற்காக சிறிய வகை ராட்டினம், பொம்மை ராட்டினம் உள்ளிட்டவை அமைக்ப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் வளையல், தின்பண்ட கடைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றுத்திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.