குப்பை கிடங்காக மாறி வரும் கொள்ளிடம் ஆற்றங்கரை


குப்பை கிடங்காக மாறி வரும் கொள்ளிடம் ஆற்றங்கரை
x
தினத்தந்தி 6 Dec 2022 12:45 AM IST (Updated: 6 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றங்கரை குப்பை கிடங்காக மாறி வருகிறது. ஆற்றங்கரையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றங்கரை குப்பை கிடங்காக மாறி வருகிறது. ஆற்றங்கரையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கொள்ளிடம் ஆறு

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று கொள்ளிடம். இந்த ஆறு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விளை நிலங்களும் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படும்போதும், மழைக்காலத்திலும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. டெல்டாவின் முக்கிய வடிகாலாகவும் கொள்ளிடம் ஆறு இருப்பதால் இந்த ஆற்றை தூய்மையாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

குப்பை கிடங்கு

இந்த நிலையில் கொள்ளிடம் ரெயில்வே பாலத்தின் அருகில் ஆற்றங்கரையோரம் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20 கிராமங்கள் மற்றும் கொள்ளிடம் கடைவீதி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் இல்லை. இதனால் கொள்ளிடம் ஆற்றங்கரை குப்பை கிடங்காக மாறி வருகிறது.

இங்கு இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் வீசப்படுகின்றன. இதன் காரணமாக ரம்மியமாக காட்சி அளிக்க வேண்டிய கொள்ளிடம் ஆற்றங்கரை அலங்கோலமாக காட்சி அளிப்பதாக இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகள்

ஆற்றின் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. இதனால் கடல் பகுதியும் மாசடைகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பது சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீராதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆற்றில் கழிவுகள் சேர்வதால் அங்கு பெரும்பாலான மக்கள் குளிப்பதை நிறுத்தி விட்டனர். மீறி குளிப்பவர்களுக்கும் சரும பாதிப்பு ஏற்படுகிறது.

குப்பை கொட்ட இடம்

மாசடைந்த நீரை குடிக்கும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் கொட்டுவதற்கு நிரந்தரமான இடம் தேர்வு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆற்றங்கரையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story