புதிதாக தோண்டப்பட்ட கிணற்றை மூழ்கடித்த ஆற்றுநீர்


புதிதாக தோண்டப்பட்ட கிணற்றை மூழ்கடித்த ஆற்றுநீர்
x

ராஜபாளையம் அருகே புதிதாக தோண்டப்பட்ட கிணற்றை ஆற்றுநீர் மூழ்கடித்து விட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே புதிதாக தோண்டப்பட்ட கிணற்றை ஆற்றுநீர் மூழ்கடித்து விட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டு குடிநீர் திட்டம்

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் 4 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ராஜீவ்காந்தி குடிநீர் மற்றும் அரசு கூட்டு குடிநீர் திட்டத்தின் சார்பில் 2 கிணறுகள் உள்ளது. மக்கள் தொகை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊருக்குள் 1,710 வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக தேவியாற்றின் கரையில் குடிநீர் கிணறு தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிணறு தோண்டும் பணிகள் தொடங்கி 1 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சுமார் 50 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை என கூறப்படுகிறது.

மூடப்பட்ட கிணறு

தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தேவியாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையில் தோண்டப்பட்ட கிணறு முழுவதுமாக மணலால் மூடி விட்டதாக மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், கிணறு வெட்டும் பணிகளை காலத்திற்குள் முடித்து கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டிருந்தால் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திருக்கும். ஆனால் பணிகள் இன்னும் முடியவில்லை. மழை நேரத்தில் பணிகள் தாமதமாக வாய்ப்பு இருப்பதால் இந்த வருடம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு கிணறு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், மூடப்பட்ட கிணறுக்குள் யாரும் விழுந்து விடாதபடி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.


Next Story