பழனி அருகே சண்முக நதியில் தண்ணீர் திருட்டு
பழனி அருகே சண்முக நதியில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது.
பழனி அருகே கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் அங்குள்ள சண்முகநதியில் உறைகிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலத்தையொட்டி தற்போது சண்முகநதி ஆற்றில் தண்ணீர் குறைந்து வருகிறது. இந்தநிலையில் சிலர் தங்களது விவசாய நிலங்களின் தேவைக்காக சண்முகநதியில் இருந்து தண்ணீரை திருடி வருகின்றனர்.
இதற்காக ஆற்றில் குழாய்களை போட்டு, மின்மோட்டார் மீது தண்ணீரை எடுத்து தங்களது நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சண்முக நதியில் தண்ணீரை திருடப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.