திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி


திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி
x

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் ஸ்ரீதிருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்றதுமான இந்த கோவில் திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இதில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து 4 கி.மீ. தூரம் நடந்து மட்டுமே செல்ல முடியும். இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அதன்படி திருமலைநம்பி கோவில் வனப்பகுதியும் மூடப்பட்டது. இதனால் கடந்த 8-ந் தேதி முதல் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனிடையே களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி முடிவடைந்தது.

இதையடுத்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 8 நாட்களுக்கு பின் விலக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார்.


Next Story