தர்மபுரி பகுதியில் நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங்ரோடு அமைக்க திட்டம்- அதிகாரிகள் தகவல்


தர்மபுரி பகுதியில் நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங்ரோடு அமைக்க திட்டம்-  அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து காரணமாக ஏற்படும் நெரிசலை குறைக்க ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் வாகன போக்குவரத்து

தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நகர பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அதியமான்கோட்டை வரை காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன.

ரிங் ரோடு

இந்த நிலையில் நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டியில் இருந்து அரூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பென்னாகரம் சாலைகளை தர்மபுரி நகருக்கு வெளியே இணைக்கும் வகையில் சுமார் 24 கி.மீ. அளவில் ரிங் ரோடு (வெளிவட்ட சாலை) அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கள ஆய்வு பணி மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தர்மபுரி பகுதியில் ரிங் ரோடு அமைக்கப்பட்டால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பிற வாகனங்கள் தர்மபுரி நகருக்குள் செல்லாமல் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய வழிவகை ஏற்படும்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

இதேபோல் அரூர், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளுக்கு சென்று, வரும் வாகனங்கள் தர்மபுரி நகர பகுதிக்குள் நுழையாமல் அந்த பிரதான சாலைகளை சென்றடைய வழிவகை செய்யப்படும்.

இதனால் தர்மபுரி நகரம் முதல் அதியமான்கோட்டை வரை உள்ள பகுதிகளில் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story