தொப்பையாறு அணைக்கு தொடர் நீர்வரத்து: தொப்பூர்-பொம்மிடி சாலை சரிந்தது-பள்ளி-கல்லூரி மாணவர்கள் அவதி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து உள்ளதால், தொப்பூர்-பொம்மிடி சாலை சரிந்தது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தொப்பையாறு அணை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தொப்பூர் ஊராட்சியில் தொப்பையாறு அணை உள்ளது. இந்த அணைக்கு சேர்வராயன் மலை மற்றும் முத்தம்பட்டி வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது நீர்வழிப்பாதைகள் வழியாக வருகிறது. தற்போது கடந்த 2 மாதங்களாக இந்த அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நிரம்பி தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
தொப்பூரில் இருந்து பொம்மிடிக்கு தொப்பையாறு அணையை ஒட்டி தார்சாலை செல்கிறது. இந்த சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள் மற்றும் ஒரு சக்கர வாகனங்கள் தினமும் பயணித்து வருகின்றன.
சாலை சரிந்தது
இந்தநிலையில் தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து உள்ளதால், அந்த வழியாக செல்லும் சாலையின் ஒருபுறம் அணை தண்ணீரும், மறுபுறம் அணைக்கு வரும் தண்ணீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அணைய ஒட்டிய பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, தொப்பூர்-பொம்மிடி சாலை நேற்று சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சாலை சரிந்து விழுந்த பகுதியில் கற்களை அடுக்கி வைத்தனர். மேலும் அந்த வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மெதுவாக, ஒரு வித அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
தரமானதாக இல்லை
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தொப்பையாறு அணையை ஒட்டி, தொப்பூர்-பொம்மிடி செல்லும் வழியில் அமைக்கப்பட்ட தார்சாலை தரமானதாக இல்லை. சமதள பகுதியில் அமைப்பது போன்று, சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தற்போது அணையை ஒட்டிய பகுதியில் சாலை சரிந்து விழுந்தது.
போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், புதிதாக, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.