வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி


தினத்தந்தி 5 Jun 2023 12:30 AM IST (Updated: 5 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மெலட்டூர் அருகே வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர் அருகே வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்

நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த முகமது ஜக்கரியா மகன் ஒசாமா (வயது19). திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் அப்துல் கலாம் (20). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சை சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர்- திருக்கருகாவூர் நெடுஞ்சாலையில் முனீஸ்வரன்கோவில் பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த பயணிகள் வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒசாமா, அப்துல் கலாம் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story