முதியவா் பலி; 3 பேர் படுகாயம்
தஞ்சை அருகே சாலை தடுப்பில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தாா். 3 பேர் படுகாயமடைந்தனர்.
வல்லம்;
தஞ்சை அருகே சாலை தடுப்பில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தாா். 3 பேர் படுகாயமடைந்தனர்.
கோவிலுக்கு வந்தனா்
திருச்சி பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 58). இவருடைய நண்பர் திருச்சி குணசீலம் அருகே உள்ள ஆமூர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (61). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.இவர்களுடன் இவர்களின் நண்பர்களான திருச்சியை சேர்ந்த கண்ணன் (58), சீனிவாசன் (61) ஆகிய 4 பேரும் நேற்று காலை திருச்சியில் இருந்து தஞ்சைக்கு கோவிலுக்கு வந்தனர். பின்னர் 4 பேரும் காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார்.
பரிதாப சாவு
தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் இருந்து செல்லும் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சாலையில் வந்தவர்கள் காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ராமசுப்ரமணியன் பலியானார்.
சிகிச்சை
விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் படுகாயமடைந்திருந்த கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமசுப்ரமணியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்து. இந்த விபத்து காரணமாக தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.