வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குண்டும்- குழியுமான சாலை


வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குண்டும்- குழியுமான சாலை
x

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலை கரடு, முரடாக உள்ளது. சாலையோரத்தில் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது.

தஞ்சாவூர்

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலை கரடு, முரடாக உள்ளது. சாலையோரத்தில் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது.

புதிய பஸ்நிலையம்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்துக்கு நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லக்கூடியவர்கள் ஆவர். அவர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் நகர பஸ்களில் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

கரடு, முரடான சாலை

நகர பஸ்கள் சென்று வருவதற்காக பஸ் நிலையம் அருகே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும், நகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளும் இந்த சாலையினால் அவதிக்குள்ளாகின்றனர்.

குவிந்து கிடக்கும் குப்பை

மேலும் பஸ் நிலையத்தில் பின்புறம் உள்ள் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் மூக்கை மூடியபடி செல்லும் நிலை உள்ளது.

குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளில் இரைதேடி கால்நடைகள் அதிகளவில் வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story