இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 இடங்களில் சாலை மறியல்; 198 பேர் கைது


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 இடங்களில் சாலை மறியல்; 198 பேர் கைது
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் தேனி உள்பட 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 198 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் தேனி உள்பட 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 198 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி, விலைவாசி உயர்வு, மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில், தேனி, கம்பம் உள்பட 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தேனி நகரில் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பள்ளிவாசல் தெருவில் இருந்து நேரு சிலை சிக்னலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நேரு சிலை சிக்னல் பகுதியில் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

198 பேர் கைது

இதேபோல், ஆண்டிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர். கடமலைக்குண்டுவில் ஒன்றிய செயலாளர் வனராஜ் தலைமையில் மறியல் செய்த 25 பேரும், போடியில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் சத்தியராஜ் உள்பட 19 பேரும், உத்தமபாளையத்தில் ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமையில் மறியல் செய்த 26 பேரும், பெரியகுளத்தில் தாலுகா செயலாளர் முஜிப்பூர் ரகுமான் உள்பட 15 பேரும், கம்பத்தில் மறியல் செய்த நகர செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட 26 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட மொத்தம் 198 பேர் கைது செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story