பெரியகுளத்தில் தேசியக்கொடி போர்த்தியபடி சுற்றித்திரிந்த நாய்; அவமதிப்பு செய்ததாக பா.ஜ.க.வினர் மறியல்
பெரியகுளத்தில் தேசியக்கொடியை போர்த்தியபடி நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் தேசியக்கொடியை போர்த்தியபடி நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேசியக்கொடியுடன் நாய்
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில், புதிய பஸ் நிலையம் பிரிவு அருகே இன்று காலை தெருநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த நாயின் மீது தேசியக்கொடி போர்த்தி கட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த சிலர் அந்த தெரு நாயை பிடித்து, அதன் மீது கட்டப்பட்டிருந்த தேசியக்கொடியை அகற்றினர்.
இதற்கிடையே நாய் தேசியக்கொடியுடன் சுற்றித்திரிந்த தகவல் பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் அதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது. இதனை பார்த்த பலரும் தேசியக்கொடியை அவமதிப்பு செய்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு நாய் மீது தேசியக்கொடி கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் நாய் மீது தேசியக்கொடியை கட்டி அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி பா.ஜ.க.வினர் நேற்று இரவு பெரியகுளம் வடகரை புதிய பஸ் நிலையம் பிரிவு அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ராஜபாண்டி, பெரியகுளம் நகர பா.ஜ.க. தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவமதிப்பு
அப்போது பா.ஜ.க.வினர், தெருநாய் மீது தேசியக்கொடியை கட்டி அவமதிப்பு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவர்களை தேச விரோத சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரியகுளத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.