பாதுகாப்பு கோரி பெற்றோர் சாலை மறியல்
பாதுகாப்பு கோரி பெற்றோர் சாலை மறியல்
திருப்பூர்,
திருப்பூர் பி.என்.ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் செயல்படும் நெசவாளர் காலனி பள்ளி மாணவர்களுக்கு விபத்து அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1700 மாணவ-மாணவிகள்
திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பெருமாநல்லூர் சாலை மற்றும் குமரானந்தபுரம் சாலை, நெசவாளர் காலனி சாலை என நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இங்கு எப்போதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்லும்போது மிகுந்த நெருக்கடிக்கு இடையே விபத்து நேரிடும் அச்சுறுத்தலோடு அவர்கள் வர வேண்டி இருக்கிறது.
எனவே பள்ளி நேரத்தில் காலை, மாலை என இருவேளையும் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உரிய தடுப்பு அரண்களோ அல்லது போக்குவரத்து போலீசார்களோ இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவரும் வரை பதற்றத்துடனே இருக்க நேரிடுகிறது.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம்போல் அந்த பள்ளியின் முன் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் எவ்வித ஒழுங்குமின்றி தாறுமாறாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பள்ளி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். பள்ளி நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து போலீசார்களை நியமிக்க வேண்டும் அல்லது உரிய தடுப்பு அரண்களை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.