மதுபோதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியரை மாற்றக்கோரி சாலை மறியல்


மதுபோதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியரை மாற்றக்கோரி சாலை மறியல்
x

நாட்டறம்பள்ளி அருகே மது போதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியரை மாற்றக்கோரியும், தலைமை ஆசிரியையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்


நாட்டறம்பள்ளி அருகே மது போதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியரை மாற்றக்கோரியும், தலைமை ஆசிரியையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போதையில் வரும் ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் அருகே சஞ்சீவினூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சஞ்சீவினூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 135 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிரிஜா என்பவர் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

மேலும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி மது போதையில் பள்ளிக்கு வருவதாகவும், இதனால் அவரது மனைவி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது. எனவே அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர், ஜோலார்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் பள்ளி தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரையும் மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளார்.

சாலை மறியல்

இது குறித்து தகவலறிந்ததும் நேற்று காலை பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி ஆசிரியரை மட்டுமே மாற்ற வேண்டும், தலைமை ஆசிரியையை மாற்றக் கூடாது என வலியுறுத்தி சஞ்சீவினூர்-மல்லக்குண்டா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குமாரும் பங்கேற்றார்.

இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்வி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story