தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
பேரணாம்பட்டு அருகே தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது. இது தொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
பேரணாம்பட்டு தாலுகா ராஜக்கல் கிராமத்தில் தார் தொழிற்சாலை இயங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் கடந்த சில மாதங்களாக கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாடு அதிகாரி, தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.
மேலும் இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாசு கட்டுப்பாடு வாரியம் திடீரென அனுமதி வழங்கியுள்ளதாகவும், தார் தொழிற்சாலை தொடங்குவதற்கான எந்திரங்கள் வந்துள்ளதாகவும், கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தார் தொழிற்சாலை இயங்க அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி ராஜக்கல் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த 25-ந் தேதியன்று பேரணாம்பட்டில் நடைபெற்ற ஜமாபந்தியில், தனித் துணை கலெக்டர் தனஞ்செயனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சாலை மறியல்
இந்த நிலையில் ராஜக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று காலை அழிஞ்சிக்குப்பம் - நரியம்பட்டு - பச்சக்குப்பம் கூட்ரோட்டில் தார் கம்பெனிக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேல்பட்டி, ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி இயக்கப்பட்டன. பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் குப்பன், தனிப் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 44 பேரை கைது செய்து எம்.வி.குப்பம் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது தாசில்தார் நெடுமாறன் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.