அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 2 இடங்களில் சாலை மறியல்
குத்தாலம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கடைவீதி சேத்திரபாலபுரம்-கோமல் சாலை மற்றும் தேரழுந்தூர்-திருவாவடுதுறை சாலை உள்ளிட்ட 2 இடங்களில் 2 குழுக்களாக பிரிந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தேரழுந்தூர் ஊராட்சி புது அக்ரஹாரம் பகுதிக்கு குடிநீர், சாலை வசதி, சுடுகாடுசாலை, சுடுகாடு 100 நாள் வேலை,அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல வழிவகை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தரக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் மண்டல துணை தாசில்தார் ராஜன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் சோமசுந்தரம், பணி மேற்பார்வையாளர் கவிதா,குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன்,அருண்குமார், தேரழுந்தூர் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன்,பெருமாள் கோவில் பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மேலும் குறுகிய காலத்திற்குள் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் மீண்டும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.