அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சென்னையில் போராட்டம் நடத்திய அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் சிவகாசி பஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தி.மு.க.வை கண்டித்து கோஷம்போட்டனர். இதையடுத்து சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையில் போலீசார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான அ.தி.மு.க. நிர்வாகிகளை கைது செய்து வேனில் ஏற்றி அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
அருப்புக்கோட்டை
அதேபோல அருப்புக்கோட்டை நகர ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க. நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வை சேர்ந்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்
சாத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் தலைமையில் முக்குராந்தல் பகுதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அம்மா பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, நகர செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வனராஜ், நகர செயலாளர் துரை முருகேசன், பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், பேரூர் செயலாளர்கள் அங்கு துரை பாண்டியன், பொன்ராஜ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.