மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சாலை மறியல்
திருப்பத்தூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பணிநிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் நடந்தது.
பணி நிரந்தரம்
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு:.) சார்பில் பல ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் திருப்பத்தூரில் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டத் தலைவர் எஸ்.தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத்தலைவர் எஸ்.ஜோதி தொடங்கி வைத்து பேசினார்.
வட்ட செயலாளர் கே.சந்திரசேகரன், பொருளாளர் ஆர்.வெங்கடேசன், எஸ்.ராஜசேகரன் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தானே, வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்புகளின் போது இரவு, பகலாக பணிபுரிந்து மின்சார வாரியத்தை தலை நிமிர வைத்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசும், வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380-ஐ அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கி உனடியாக பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
சாலை மறியல்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரித்திட வேண்டும், மின்வாரியத்தில் ஒப்புந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதை கைவிட வேண்டும், பணிசான்றிதழ் வழங்க வேண்டும், ஊதியயர்வு, வேலைப்பளு பேச்சவார்த்தைகளில் கோரிக்கைகளை பேசி தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.