ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கடலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக சம்பவத்தன்று சூர்யா மற்றும் அவரது சகோதரர் ரகு ஆகியோர் வந்தனர். அவர்களை தனியார் நிறுவன காவலாளி டேவிட் என்பவர் பிரசவ வார்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டேவிட்டை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
உறவினர்கள் முற்றுகை
இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் சூர்யா, ரகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சிகிச்சையில் உள்ள சூர்யாவின் மனைவியை சிலர் சந்தித்து டேவிட்டை தாக்கியது யார் என கேட்டு அவரை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை போலீசார் அவர்களை சமரசப்படுத்தி இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில், காவலாளி டேவிட்டை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை 8 மணி அளவில் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் 9 மணி வரை நீடித்தது. இந்த போராட்டத்தினால் அரசு ஆஸ்பத்திரி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள், வேலைக்கு சென்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.