சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்:77 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைப்பாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். சமையலாளர், உதவியாளர்கள் 5 ஆண்டு பணி முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் பணியிடம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்களை ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் சத்துணவு ஊழியர்கள் நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்களை போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தடுத்தனர். இதனால் சத்துணவு ஊழியர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கைது
போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி.ஜெயலட்சுமி, இணைச் செயலாளர் மஞ்சுளா, பொருளாளர் சண்முகலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம்.ஜெயலட்சுமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான், துணைத் தலைவர் கனகவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 2 ஆண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
-------------------