பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:32 PM GMT (Updated: 22 Sep 2022 7:00 PM GMT)

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்

விருதுநகர்

வத்திராயிருப்பு

ராஜபாளையம், வத்திராயிருப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் இல்லத்தில் சோதனை செய்து பலரை கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து 30-க்கும் மேற்பட்டோர் அந்த அமைப்பின் விருதுநகர் மாவட்ட செயலாளர் சேக் முகமது தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்ததால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனை கண்டித்து ராஜபாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நடத்திய திடீர் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.


Next Story