பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
குமரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 148 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
குமரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 148 பேரை போலீசார் கைது செய்தனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் என்.ஐ.ஏ. சோதனைக்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இடலாக்குடி சந்திப்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் முகமது ஜிஸ்தி தலைமை தாங்கினார். ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகியமண்டபம்
அழகியமண்டபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சரக தலைவர் ஷெரிப் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 11 பெண்கள் உட்பட 60 பேரை தக்கலை போலீசார் கைது செய்து தக்கலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வெள்ளமடம்
இதுபோல் தோவாளை ஒன்றிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வெள்ளமடம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்சார் தலைமை தாங்கினார். திட்டுவிளை நகர தலைவர் முகம்மது இஸ்வான், மாதவலாயம் நகர தலைவர் ரிபாயுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 50 பேரை நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி சப்- இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி மற்றும் போலீசார் கைது செய்து ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.