கொங்கணாபுரம் அருகே கரும்பு விவசாயிகள் சாலை மறியல்


கொங்கணாபுரம் அருகே கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
x

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பையும் சேர்க்க கோரி கொங்கணாபுரம் பகுதியில் கரும்பு விவசாயிகள் திடீரெனசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

எடப்பாடி:

கரும்பு விவசாயிகள்

தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் ரொக்க பணம் ரூ.1,000 வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கடந்த ஆண்டுகளில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தாங்கள் விளைவித்த செங்கரும்புகளை விற்பனை செய்ய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கரும்பு சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படும் எனக்கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைமறியல்

இதன் ஒரு பகுதியாக நேற்று எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் கன்னந்தேரி பஸ் நிறுத்தம் அருகே, அப்பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொங்கணாபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாயிகளின் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.. இதேபோல் பூலாம்பட்டி காவிரி பாசன பகுதியில் கரும்பு விவசாயிகள், தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜெயராமன், முனியப்பன், குழந்தைவேலு, மாது, பாபு உள்ளிட்ட திரளான கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story