பள்ளி முன்பு பஸ் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்


பள்ளி முன்பு பஸ் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்
x

திருவொற்றியூரில் பள்ளி முன்பு பஸ் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பெரியார் நகரில் எம்.டி.எம். அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த ஆரம்ப பள்ளிக்கூட வாசல் முன்பு மாநகர பஸ் நிழற்குடை அமைக்க மாநகராட்சி கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் அந்த பள்ளத்தால் விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே பள்ளி முன்பு மாநகர பஸ் நிழற்குடையை அமைப்பதற்கு பதிலாக வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று மாலை பள்ளி முன்பு ஒன்று கூடினர். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நிழற்குடையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து சாைல மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story